நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும்; இரட்டை இலை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது: வி.கே.சசிகலா பேட்டி

மன்னார்குடி: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும் என வி.கே. சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது, சின்னம் கிடைக்காதது போன்ற காரணங்களால் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியில் போட்டியிட நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் இரு அணியிலும் வேட்பாளர்கள் கிடைக்காமல் திணறி வருகின்றனர். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சசிகலா; அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் என்னுடைய முடிவாக இருக்கும்.

தொண்டர்களின் மனக்குமுறலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். இரட்டை இலை சின்னத்தை எதுவும் செய்ய விடமாட்டேன். இரட்டை இலையை எந்தக் காலத்திலும் யாராலும் எதுவும் செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலைக்கு ஆபத்து வர விடமாட்டேன். என் நிழலைக் கூட யாராலும் நெருங்க முடியாது. திரும்ப திரும்ப அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை  பற்றி சொல்லும்போது கட்சித் தொண்டர்களை குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். ஏனெனில் இந்த பதவி குறித்து எங்களது நிறுவனத் தலைவர் அதன் விதிகளை முறையாக ஏற்படுத்திவிட்டுத்தான் சென்றுள்ளார்கள்.

சின்னம் முடங்குவது போன்ற சூழ்நிலையை உருவாக்குவது எம்ஜிஆர்-க்கும், ஜெயலலிதாவுக்கும் செய்யும் துரோகம், நான் எடுக்க வேண்டிய முயற்சிகளை எடுத்துக் கொண்டு உள்ளேன். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும். அதிமுகவை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

Related Stories: