ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் தை திருவிழா 26ல் தொடக்கம்: பிப். 3ல் தேரோட்டம்

திருச்சி: பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு தை மாத தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் நாளை மறுதினம் (26ம் தேதி) துவங்குகிறது. இவ்விழா பிப்.5ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் கொடிப்படம் புறப்பட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. 2ம் நாளில் நம்பெருமாள் ஒற்றை பிரபை வாகனம், மாலையில் ஹம்ச வாகனம், 3ம் நாளில் சிம்ம வாகனம், மாலையில் யாளி வாகனம், 4ம் நாளில் இரட்டைபிரபை வாகனம், மாலையில் கருட வாகனம், 5ம் நாளில் சேஷ வாகனம், மாலையில் ஹனுமந்த வாகனம், 6ம் நாளில் கற்பக விருட்சம் வாகனம், மாலையில் யானை வாகனம், 7ம் நாளில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் எழுந்தருளி நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

8ம் நாள் நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளுகிறார். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்.3ம் தேதி காலை 6 மணிக்கு நடக்கிறது. 10ம் நாளில் சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 5ம் தேதி நம்பெருமாள், ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள் திருவீதி வலம் வருகிறார். இதையொட்டி நேற்று மாலை ரங்கா, ரங்கா கோபுரம் அருகில் உள்ள தைத்தேரில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related Stories: