‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் முதன்முறையாக துப்பாக்கி குண்டுகள் முழக்கம்; நாளை மறுநாள் குடியரசு தின கொண்டாட்டம்

புதுடெல்லி: நாளை மறுநாள் குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில், முதன் முறையாக கடமை பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றுகிறார். இந்தாண்டு குடியரசு தின விழாவில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி (நாளை மறுநாள்) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் பதவியேற்ற பின்னர், முதன் முறையாக ‘கடமை பாதை’யில் (கர்தவ்ய) தேசியக் கொடியை ஏற்றுகிறார். இந்த கடமை பாதையானது, கடந்த காலங்களில் ‘ராஜ்பாத்’ என்று அழைக்கப்பட்டது.

ஆனால் ஒன்றிய அரசு அதன் பெயரை கடமை பாதை என்று மாற்றியது. இந்நிலையில் குடியரசு தினம் குறித்த சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தாலும் கூட, புதியதாக வகுக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமானது 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி தான் நடைமுறைக்கு வந்தது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். அன்றைய தினம் நாட்டின் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுவார். அதன்பின், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடக்கும்.

நாட்டின் முதல் குடியரசு தின விழா, ெடல்லியின் இர்வின் ஸ்டேடியத்தில் நடந்தது. தற்போது இந்த இடத்தை தேசிய அரங்கம் என்று அழைக்கின்றனர். கடந்த 1954ம் ஆண்டு வரை குடியரசு தின விழாக்கள் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. இர்வின் ஸ்டேடியம், கிங்ஸ்வே (ராஜ்பாத்), செங்கோட்டை, ராம்லீலா மைதானம் ஆகிய இடங்களிலும் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும், 1955ம் ஆண்டு முதல் ராஜ்பாத்தில் (கடமை பாதை) தான் குடியரசு தின கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அணிவகுப்பு மரியாதையானது, ரைசினா ஹில்ஸில் தொடங்கி ராஜ்பாத், இந்தியா கேட் வழியாக செங்கோட்டையை அடைகிறது.

முதல் குடியரசு தின அணிவகுப்பைக் காண சுமார் 15 ஆயிரம் பேர் மைதானத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அணிவகுப்பில் முப்படையினரும் கலந்து கொண்டனர். இதுதவிர, ராணுவத்தின் 7 குழுக்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்றன. இந்த மரபு இன்றும் தொடர்கிறது. அதேபோல் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட காலத்தில் இருந்தே, வெளிநாட்டு சிறப்பு விருந்தினரை அழைக்கும் வழக்கமும் இன்று வரை தொடர்கிறது. முதல் குடியரசு தின விழாவில் இந்தோனேசிய அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்தாண்டு எகிப்து அதிபர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அந்நாட்டின் இசைக் குழுவும், இந்திய இசைக்குழுவுடன் இணைந்து விழாவை சிறப்பிக்க உள்ளது. அதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி பகுதியின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் பவ்னிஷ் குமார் கூறுகையில், ‘குடியரசு தின கொண்டாட்டத்தின் போது, தேசிய கீதம் பாடிய பின் 21 குண்டுகள் முழங்கும். இதற்காக கடந்த காலங்களில் 25-பவுண்டர் ரக துப்பாக்கிகளுடன் கூடிய பழங்கால பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தாண்டு குடியரசு தின கொண்டாட்டத்தின் போது 105 மிமீ இந்திய பீல்ட் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தி மரியாதை செய்யப்படும். இவை ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டில் (ஜபல்பூர் துப்பாக்கி  கேரேஜ் தொழிற்சாலை மற்றும் கான்பூர் துப்பாக்கி பீல்ட் தொழிற்சாலை) தயாரிக்கப்பட்டவை. அதேபோல் விழாவில் காட்சிப்படுத்தப்படும் அனைத்து ராணுவ உபகரணங்களும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை’ என்றார்.

Related Stories: