கோயம்பேட்டு பஸ் நிலையத்தில் ஆண் பயணிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்து சைக்கோ கும்பல் அட்டூழியம்: தடுத்து நிறுத்த போலீசாருக்கு கோரிக்கை

அண்ணாநகர்: ஆண் பயணிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்து, சைக்கோ கும்பல் அட்டூழியம் செய்து வருவது கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பையும், மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 24 மணி நேரம் அனைத்து ஊர்களுக்கும் செல்ல அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

இந்நிலையில், சமீபகாலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.  

சமீபத்தில், ஆண்களிடம் பாலியல் சில்மிஷம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்கின்ற ஆண்களிடம் ஒரு கும்பல் சில்மிஷத்ைத அரங்கேற்றி வருகிறது. இதனால் தினமும் பலபேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் பலர், தங்களுக்கு நடக்கும் சம்பவம் பற்றி வெளியே  சொல்வதற்கு அச்சப்பட்டு சென்று விடுகின்றனர். இதை பயன்படுத்தி சைக்கோ கும்பல் தொடர்ந்து, ஆண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறது.

சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த பாலகணேஷ் (25) என்பவர் ஒரு தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த இரண்டு தினங் களுக்கு முன்  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறையில் சிறுநீர் கழிக்கும் போது அங்கு வந்த ஒரு வாலிபர், திடீரென பாலகணேஷின் சட்டையை பிடித்துள்ளார். இதனால் ஆவேசம் அடைந்த அவர், அந்த நபரை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளார். பிறகு கோயம்பேடு காவல் நிலையத்துக்கு சென்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் சைக்கோ நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது போலீசார், ‘‘விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து, பாலகணேஷ் கூறும்போது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் ஆண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படுகிறது. கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலைய வாசல் முன்னாடி பேருந்துக்காக காத்திருக்கும் ஆண் பயணிகளை குறிவைத்து பாலியல் தொழிலுக்கு அழைக்கின்றனர். இதற்காகவே ஒரு சைக்கோ கும்பல் சுற்றி வருகிறது. பேருந்துக்கு காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் வரம்பு மீறுகின்றனர்.

சிலநேரம் இளைஞர்களிடம் இருந்து உடமைகளை பறித்துவிட்டு தப்பிவிடுகின்றனர். எனவே, இந்த செயலில் ஈடுபடும் சைக்கோ நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும்’’ என்றார். இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: