யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கப்படுமா?... தேர்வர்கள் எதிர்பார்ப்பு

பழநி: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்கப்படுமா என்று தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மிக உயர்ந்த பதவிகளாக கருதப்படுவது ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்றவைகளே ஆகும். இதற்கான தேர்வினை ஆண்டுதோறும் யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல்நிலை, முதன்மை, நேர்முக தேர்வு என 3 நிலைகளில் நடத்தப்படுகிறது. இந்த தேர்வின் அஸ்திவாரமாக கருதப்படுவது முதல்நிலை தேர்வே ஆகும். இந்த தேர்வானது இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் மட்டுமே எழுதும் வகையில் உள்ளது.

இதனால் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்து கொள்ள முடிவதில்லை. ஆனால், டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளை 20 லட்சம் பேர் சர்வ சாதாரணமாக எழுதுகின்றனர். இதற்கு முதன்மையான காரணம் தேர்வு தாய்மொழியில் இருப்பதே ஆகும். ஆனால், யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்வர்கள் அதிகம் கலந்து கொள்ளாததற்கு காரணம் தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் இல்லாததே ஆகும். ஆனால், மெயின் தேர்வு மற்றும் நேர்முக தேர்வுகள் 8வது அட்டவணையில் உள்ள மாநில மொழிகளில் எழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது.

எனினும், முதல்நிலை தேர்வே மற்ற நிலைகளுக்கு அடிப்படையாகும். இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், சமீபத்தில் எஸ்எஸ்சி தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும். இதுபோல் நீட்தேர்வும் தமிழ் உட்பட 13 மொழிகளில் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, 2024ம் ஆண்டிலிருந்தாவது யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வினை தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்த மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பரிசீலிக்க வேண்டும். இதற்கு தமிழக முதல்வரின் தலையீடு அவசியமென தேர்வர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது என்றார்.

Related Stories: