ஈரோடு இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடுகிறதா?..2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார் என கே.பி.ராமலிங்கம் பேட்டி

மொடக்குறிச்சி: ‘ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜ போட்டியிடுமா? அல்லது அதிமுகவில் எந்த அணிக்கு ஆதரவு? என்பதை 2 நாட்களில் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பார்’ என பாஜ மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி அணியினர் தாங்கள் போட்டியிடப்போவதாக அறிவித்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் தாங்களும் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவும் கேட்டுள்ளார். இப்படி இரு தரப்பும் முட்டி மோதுவதால் பாஜ என்ன செய்வது? என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

யாருக்கு ஆதரவு அளித்தாலும் அது பிரச்னையில் கொண்டு விடும் என்று நினைப்பதால் இதை காரணம் காட்டி நாமே களம் இறங்கி விடலாம் எனவும், அதிமுகவின் ஆதரவை விடாப்பிடியாக கேட்டுப்பெற்றுவிடலாம் எனவும் பாஜ முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக  பாஜ மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் இடைத்தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழுவினர் மற்றும் நிர்வாகிகள் நேற்று ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். பின்னர் கே.பி.ராமலிங்கம் அளித்த பேட்டி:

கடலூரில் நேற்று முன்தினம் பாஜ சார்பில் மாநில செயற்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்று (நேற்று) ஈரோட்டில் ஆலோசனை நடத்தப்பட்டது. இத்தேர்தலில் பாஜ போட்டியிடுமா என்பது குறித்தும் அல்லது அதிமுகவில் எந்த அணிக்கு பாஜ ஆதரவளிக்கும் என்பது குறித்தும் இன்னும் 2 நாட்களில் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பார்.

அதிமுகவில் இரண்டு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்பது எங்கள் கருத்து. ஆனால் பாஜ இரு அணிகளை சேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடாது. அடுத்த கட்சியின் தனிப்பட்ட விஷயங்களில் நாங்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. பாஜ முன்னிலையில் இருக்க வேண்டும் என்று மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஓபிஎஸ் எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* டெல்லிக்கு விரைவில் அறிக்கை

இடைத்தேர்தலுக்காக பாஜ சார்பில் அமைக்கப்பட்ட 14 பேர் கொண்ட குழுவினர் தொகுதி நிலவரம் குறித்து ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிக்கை விரைவில் கட்சி  மேலிடத்தில் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. அதன் அடிப்படையில் பாஜவின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது. 

Related Stories: