திமுக கூட்டணிக்கு தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தருவேன்: இளங்கோவன் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில், திமுக கூட்டணிக்கு மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தருவேன் என்று காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:  காங்கிரஸ் மேலிடம் குறிப்பாக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு தந்திருக்கின்றனர். என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி உடையவனாக இருப்பேன். வேட்பாளராக அறிவிக்கப்படுவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

 எனினும், எனக்கு அளித்த வாய்ப்பை பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணிக்கு பெற்று தருவேன். இந்த தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கியதற்காக மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை இல்லாமல் யாரையாவது காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்து இருந்தாலும் நாங்கள் ஆதரிப்போம்.

 முதல்வரை இன்று சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் நேரம் ஒதுக்கிய பிறகு அவரையும் கேஎஸ்.அழகிரியும் சந்தித்து விட்டு ஈரோடு செல்வேன். என்னை பொறுத்தவரை அதிமுக நான்காக உள்ளது, நான்கு அதிமுகவும் வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை நிறுத்தும்.

இந்த நான்கு அதிமுக கட்சிகளும் பாஜவை ஆதரிக்கும் என்று நினைக்கிறேன். பாரதிய ஜனதா கட்சி போட்டியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால் அப்போதுதான் திமுகவின் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும். யார் போட்டியிட்டாலும் மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம். காரணம் ஸ்டாலின். திமுகவினர் கடுமையாக உழைத்து உள்ளார்கள். அதனால் கண்டிப்பாக அவரோடு ஆதரவோடு இருக்கின்ற காங்கிரஸ் வேட்பாளராகிய எங்களுக்கு வெற்றி உறுதியாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories: