நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு காமராஜர் சாலையில் 2ம் நாள் அணிவகுப்பு ஒத்திகை: மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் நடந்தது

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினா காமராஜர் சாலையில், 2வது நாளாக முப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் நேற்று நடந்தது. நாட்டின் 74வது குடியரசு தின விழா வரும் 26ம் தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நடைபெறும் குடியரசு தின விழா என்பதால் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மெட்ரோ பணி காரணமாக, இந்த ஆண்டு மெரினா உழைப்பாளர் சிலை அருகே விழா ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

2வது நாளாக நடந்த அணிவகுப்பு ஒத்திகை மெரினா காந்தி சிலையில் இருந்து போர் நினைவு சின்னம் வரை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், தேசிய மாணவர் படை, ஒன்றிய தொழிலக பாதுகாப்பு படை, ஆர்.பி.எப் வீரர்கள், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள் என போலீசாரின் வாகன ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் வருவது போலவும், அவர்களுக்கு மரியாதை செய்வது போல் காவல்துறை அதிகாரிகளை வைத்து 2ம் நாள் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த பாதுகாப்பு ஒத்திகையால் மெரினா காமராஜர் சாலையில் நேற்று காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இறுதி பாதுகாப்பு ஒத்திகை நாளை நடைபெறுகிறது.

Related Stories: