கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் பிரபல ரவுடிகள் 12 பேரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை நிறைவு: அடுத்தகட்ட நடவடிக்கைக்கு சிபிசிஐடி போலீசார் தீவிரம்

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, 12 பேரிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனை நேற்று நிறைவு பெற்றது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன், சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், புதிய கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

அதன்படி கொலை நடந்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், குற்றவாளிகளைப் பிடிக்க உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள முடிவுசெய்து, ராமஜெயம் கொலை தொடர்பாக 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்து வந்தது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள தடய அறிவியல் துறை அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை கடந்த 18ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், தினேஷ் குமார், நரைமுடி கணேசன், மயிலாடுதுறையை சேர்ந்த சத்யராஜ் ஆகியோரிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர்களிடம் ராமஜெயம் கொலை குறித்து 12 கேள்விகளை தடயவியல் நிபுணர்கள் கேட்டு பதில்களை பெற்றனர்.

தொடர்ந்து 19ம் தேதி செந்தில், ராஜ்குமார், கலைவாணன், சுரேந்திரன் ஆகியோரிடமும், 20ம் தேதி சிவா என்ற குணசேகரன், சாமி ரவி, மாரிமுத்து ஆகியோரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள ராஜ்குமார் என்பவரிடம் நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடந்தது. அதேபோல் சிவாவிடமும் மீண்டும் உண்மை கண்டறியும் சோதனை நேற்று நடந்தது. காலை 11.15 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2.30 மணி வரை டெல்லி தடய அறிவியல் துறை அதிகாரி ஜான் மோசஸ் முன்னிலையில் இந்த சோதனை நடந்து முடிந்தது.

இந்த சோதனையின் போது தடயவியல் நிபுணர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றனர். 12 பேரிடமும் உண்மை கண்டறியும் சோதனை முடிவடைந்த நிலையில், சோதனை தொடர்பான அனைத்தையும் அறிக்கையாக தயார் செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதனை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் தடயவியல் நிபுணர்கள் வழங்க இருக்கின்றனர். அந்த அறிக்கையை பெற்ற பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: