சிஎம்டிஏ கருத்து கேட்பு கூட்டம் பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி வழங்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆலந்தூர்: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக 2027-2047 ஆண்டிற்கான சென்னை பெருநகர மக்களுக்கான 3ம் முழுமை திட்டத்தின் தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிக்காக பொதுமக்களின் கருத்துக்களை கேட்கும் கூட்டம் நங்கநல்லூர் இந்திரா நகரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் தலைமை வகித்தார். சென்னை பெருநகர வளர்ச்சி குழும துணை திட்டமிட்டாளர் ருத்ரமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி ஜெகதீஸ்வரன், அமுதப்பிரியா செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நலச்சங்க நிர்வாகிகள், அடுக்குமாடி கட்டிடம் கட்டுவோர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அதில், சென்னை நகர சாலைகள் விரிவாக்கம் செய்யும்போது, அச்சாலையின் இருபுறமும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் கட்டும்போது பார்க்கிங் வசதிகள் இருந்தால் மட்டுமே சி.எம்.டி.ஏ.அனுமதிக்க வேண்டும் என்றும் பெருங்குடியில் அறிவியல் முறைப்படி குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, புறநகரில் உள்ள நீர்வழித்தடங்களில் கழிவுநீர் கலப்பதை  தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மின்வாரியத்தின் வயர்கள், தொலைபேசி, தொலைக்காட்சி,  தனியார், இன்டர்நெட் வயர்கள் அனைத்தையும் பூமிக்கடியில் செல்லும் வகையில் திட்டமிட வேண்டும்.

மேலும், பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் நேரடியாக பூமியில் புதைக்காமல் கான்கிரிட் தடுப்புக்கள் மூலம் செல்லும் வகையில் திட்டமிட வேண்டும்.   சென்னை, புறநகரில் உள்ள ஏரி, குளம், நீர்வழித்தடங்களை முழுமையாக இணைக்க வழிவகை செய்ய வேண்டும். மின்சார ரயில், மெட்ரோ ரயில், மேம்பால ரயில், பேருந்துகள் அனைத்தும் பரங்கிமலையில் இருந்து புறப்படும் முனையம் அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில், நலச்சங்க நிர்வாகிகள் ராமராவ், தமிழ்ச்செல்வி, ஜமுனா ராணி அகஸ்டின் கட்டிடம் கட்டுவோர் சங்கத்தை சேர்ந்த மோகன், நாஞ்சில் சுதா பிரசாத், கே.ஆர்.ஜெகதீஸ்வரன், ஜெ.நடராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: