எய்ம்ஸ் லோகோவில் தமிழ்மொழியை சேர்க்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு மாணிக்கம்தாகூர் எம்பி கடிதம்

திருப்பரங்குன்றம்: மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை லோகோவில் தமிழ்மொழியில் பெயரை சேர்க்க வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்பி ஒன்றிய அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ்மொழி கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு, மதுரையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். இதுவரை பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு மற்றும் நிறுவனக்குழுவின் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற அனைவரும் ஏற்கனவே இந்த மருத்துவமனையை விரைவில் தொடங்குவதை உறுதி செய்வதற்காக வளர்ச்சி பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் சமீபத்தில் சென்னையில் நடந்த மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு மற்றும் நிறுவனக்குழு ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாள சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் போது, ​​மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ்மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தி உள்ளனர். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ்மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும் என தமிழக மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Related Stories: