அழிவுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்ற நகரம்: 15,000 ஆண்டு கால பூம்புகார் துறைமுகத்தின் அதிசயம்

* ஆய்வு திட்ட தலைவர் தகவல்

* செயற்கைகோள் படங்கள் வெளியீடு

திருச்சி: மயிலாடுதுறை மாவட்டம் காவிரி முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் பூம்புகார் சோழ மன்னர்களால் 2,500 ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்ததாக ஆய்வில் கூறப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த ஒரு நகரம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திடீரென மாயமானதும், அதுகுறித்த விரிவான எந்த தகவல்களும் இல்லாதிருப்பதும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடலுக்குள் சென்ற பூம்புகார் அழிவு குறித்து வேறு எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. இந்நிலையில் ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை பூம்புகார் குறித்த ஆய்வுக்காக ₹10 கோடி நிதி ஒதுக்கியது. பாரதிதாசன் பல்கலைக்கழக பல்துறை சார்பில், ‘பூம்புகார் ஆய்வுத் திட்டம்’ தீட்டப்பட்டு கடந்த 2019ம் ஆண்டு ஆய்வு துவக்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டாக நடந்த இந்த ஆய்வில் பூம்புகார் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபற்றி திருச்சி காஜாமலை பாரதிதாசன் பல்கலைக்கழக பூம்புகார் ஆய்வுத்திட்ட தலைவர் முனைவர் ராமசாமி கூறுகையில், உலகில் கடற்கரை நகரங்கள் துறைமுகங்களாகவும், செல்வந்தர்களின் சுற்றுலாத் தலங்களாகவும் இருந்து வந்துள்ளன. அதேபோல இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் கிருஷ்ண பகவான் வாழ்ந்த துவாரகாவும், கிழக்கு கடற்கரைப் பகுதியில் பூம்புகாரும் தலை சிறந்த துறைமுக நகரங்களாக இருந்துள்ளன. பூம்புகாரில் இருந்து கிழக்கே தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும், மேற்கே எகிப்து வரையிலும் கடல்சார் வணிகம் இருந்திருக்க வேண்டும். 2, 500 ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த நகரம் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் திடீரென மாயமானதும், பூம்புகார் அழிவு வரலாறு குறித்து எவ்வித தகவலும் இல்லாமல் இருந்ததுமே கடந்த கால உண்மை நிலையாகும்.

தற்போதைய பூம்புகார் நகரத்தின் கடற்கரையில் இருந்து கிழக்கு திசையில் 40 முதல் 50 கிமீ தூரத்திலான கடற்பரப்பில் 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் அழிந்துபோன பூம்புகார் நகரம் குறித்து ஆச்சரியம் அளிக்கும் பல தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த ஆய்வில் இந்திய செயற்கைகோள் படங்கள் வாயிலாகவும், ஜெப்கோ என்ற பல்துறை சார்ந்த தொழில் நுட்பம் வாயிலாக கடலின் கீழ் தரைமட்ட அளவுகள் கண்டறியப்பட்டன. எம்பிஇஎஸ் என்ற ஒலிசார் கடல்கீழ் தரை மட்ட அளவீடு செய்யும் நவீன முறைகள் கையாளப்பட்டன. இதன் வாயிலாக காவிரி நதி தெற்கில் இருந்து சிறிது சிறிதாக நகர்ந்து வடக்கே கொள்ளிடத்துடன் இணைந்ததை முதலில் அறிந்தோம். ஜெப்கோ வாயிலாக நடத்திய ஆய்வில், கடலுக்கு கீழே 40 கிமீ துாரத்துக்கு மூன்று மிகப்பெரிய டெல்டா பகுதிகளை காவிரி நதி உருவாக்கியிருப்பது தெரியவந்ததுள்ளது.

தற்போதைய பூம்புகார் கடற்கரையில் இருந்து கிழக்கு நோக்கி 40 கி.மீ தூரத்தில் அப்போதைய கடற்கரை இருந்திருக்க வேண்டும் என்ற தகவல் கிடைத்துள்ளது. கடற்கரையில் இருந்து 5 கி.மீக்கு அப்பால் கடற்பரப்பில் துவங்கி 40 கி.மீ தூரம் வரையுள்ள ஆயிரம் சதுர கிமீ பகுதியில் எம்பிஎஸ்இ சர்வேயானது, தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இதில் பூம்புகார் குறித்த மர்மங்கள் உரிய ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளன. தற்போதைய கடற்கரையில் இருந்து 40 கிமீ தூரத்தில் 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் சுமார் 250 சதுர கி.மீ பரப்பளவில் ஒரு துறைமுக நகரம் கண்டறியப்பட்டுள்ளது. இந்நகரம் சுமார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என தெரிய வந்துள்ளது. இந்த துறைமுகத்தின் அருகிலேயே சுமார் 30 கிமீ நீளத்தில் அமைந்துள்ளது.

துறைமுகத்தின் அருகாமையில் பல்வேறு கட்டிடங்களுடன் கூடிய குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது.

இத்துறைமுகம் வடக்கு தெற்காக 11 கி.மீ நீளமும், கிழக்கு மேற்காக 2.5 கிமீ அகலமும் கொண்டது. இதில் வடக்கு தெற்காக நீண்ட கால்வாய் கப்பல் போக்குவரத்துக்காகவும், இதனிடையே அமைந்துள்ள குறுக்கு கால்வாய்கள் கப்பல்களை திருப்புவற்காகவும் பயன்படுத்தி இருக்க வேண்டும். இந்த துறைமுகத்தில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம் ஆயிரத்து 100 ஆண்டுகளுக்கு முன்னர் பராந்தக சோழன் வேதாரண்யம் கோடியக்கரையில் கட்டிய கலங்கரை விளக்கம் போன்றுள்ளது. கரைப்பகுதியில் இருந்து கலங்கரை விளக்கத்துக்கு செல்வதற்காக கடலில் கட்டப்பட்ட பாலத்தை தாங்கி நின்ற தூண்கள் தென்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம், பதிவாளர் கணேசன், ஆய்வுத் திட்ட உறுப்பினர் முனைவர் பழனிவேல், முனைவர் சரவணவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

நீர்வீழ்ச்சி இருந்ததற்கான அடையாளம்

தற்போது கடலுக்கடியில் சென்றுவிட்ட டெல்டா நிலப்பரப்பை டெல்டா-1, 2, 3 என்று பிரித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், பல்வேறு காலங்களில் பூம்புகார் நகரம் மீண்டும், மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அதன்படி, டெல்டா 1ல் அமையப்பெற்ற பூம்புகார் 15 ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்டது. டெல்டா-2 மற்றும் டெல்டா-3 பூம்புகார் நகரங்கள் முறையே 12 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இதற்கிடையில் ஜெப்கோ படங்களும், எம்பிஎஸ்இ படங்களும், மேற்கே காவிரியின் வண்டல் பகுதிக்கும், தற்போதைய பூம்புகாருக்கும் இடையில் பல கிளை நதிகளும், பள்ளத்தாக்குகளும், நீர்வீழ்ச்சிகளும் இருந்ததற்கான அடையாளங்களை தெளிவுபடுத்துகின்றன.

பூம்புகார் வரலாறு

சுனாமி, கடல் மட்டம் உயர்தல், வெள்ளம், புயல் காரணமாக இந்த மூன்று பூம்புகாரும் அழிந்திருக்கலாம். கடலுக்குள் டெல்டா பகுதி செல்ல செல்ல கடலின் கரையானது 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய மாயவரம் பகுதிவரை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அங்கிருந்து கடல் மெல்ல உள்வாங்கி சீர்காழியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும், நாங்கூரில் 3 ஆண்டுகளுக்கு முன்னரும் உள்வாங்கியுள்ளது. தற்போதைய நிலைக்கு 2,500 ஆண்டுகளுக்கு முன் வந்திருக்கலாம். இந்த ஆய்வுகளின் வாயிலாக பூம்புகார் வயது 2,500 ஆண்டுகள் அல்ல என்பதும், அதன் வயது 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதும் தெரியவருகிறது.

Related Stories: