காற்று வேக மாறுபாடு தமிழகத்தில் லேசான மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

சென்னை: கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய  மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், வட மாநிலங்களில் கடும் பனி மற்றும் குளிர் நிலவுகிறது. அதன் காரணமாக வட மாநில பகுதியில் இருந்து வங்கக் கடல் பகுதி வழியாக குளிர் காற்று வீசி வருகிறது. கடல் பகுதியில் நுழையும்  குளிர் காற்று தரைப் பகுதியை நோக்கி நுழைவதால், தரைப்பகுதியிலும் கடும் குளிர் நிலவுகிறது. மலைப் பகுதியில் உறைபனியும் நீடித்து வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான  மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ்  குறைவாக  இருக்கும். நீலகிரி, கோவை, மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.

இதே நிலை 24ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஓரளவுக்கு மேகமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதியில் வட கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories: