திருத்தணி காவல்நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்கள்: உடனடியாக ஏலம் விட கோரிக்கை

திருத்தணி: திருத்தணி காவல்நிலையத்தில் துருப்பிடித்து வீணாகும் வாகனங்களை உடனடியாக ஏலம்விட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கன்னிகாபுரம் சாலையில் உள்ள காவல் நிலையம் உள்ளது. திருத்தணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெறுகின்ற ஆற்று மணல், சவுடு மணல் கடத்தல், செம்மர கட்டை கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டும் வாகனங்கள் அனைத்தும் திருத்தணி காவல்நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர விபத்து, கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் சாராயம் கடத்தல் வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் அனைத்து வாகனங்களும் காவல்நிலையத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும் வழக்குகள் முடியும் வரை திருத்தணி காவல் துறையின் கட்டுப்பாட்டில்தான் வைக்கப்பட்டிருக்கும். இப்படியாக கடந்த ஐந்து ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் காவல் நிலையத்தில் வைத்துள்ளதால் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்கொண்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும் காவல் நிலையம் எதிரே உள்ள தனியார் இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பெய்த மழையில் அனைத்து வண்டிகளும் நனைந்துவிட்டதால் துருப்பிடித்து வீணாகி வருகிறது.

இது மட்டுமின்றி அந்த வாகனத்தில் அவ்வப்போது ஒரு சிலர் பேட்டரி உள்ளிட்ட பொருட்களையும் திருடிச்சென்று விடுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திறந்தவெளியில் வாகனங்கள் கிடப்பதால்தான் திருட்டு நடக்கிறது என்று கூறுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘’குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஓராண்டு காலத்திற்குள் ஏலத்துக்கு கொண்டு வந்துவிட வேண்டும். அப்போதுதான் வாகனங்கள் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும். ஏலம் விடும்போது கூடுதல் தொகையும் கிடைக்கும். பல ஆண்டுகளாக துருப்பிடித்து வீணாகி போகின்ற வாகனங்களை ஏலம் விடும்போது அது காயலான் கடைக்கும் மட்டுமே எடுத்துச்சென்று பிரித்து எடுத்து விற்பனை செய்கின்றனர்.

இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வீணாகுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு தனி சட்டத்தை இயற்றி ஓராண்டுக்குள் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை ஏலத்துக்கு விட்டு அரசுக்கு வருவாய் ஈட்ட வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திவைக்க காவல்நிலையத்துக்கு தனியாக இடம் வாங்கி கொடுத்து, அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைத்து வாகனங்களை பாதுகாக்கவேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் வாகனங்கள் நல்லநிலைமையில்  இருப்பதுடன் அரசுக்கு அதிக வருமானமும் கிடைக்கும்’ என்றனர்.

Related Stories: