காணும் பொங்கலையொட்டி கோயில்களில் அலைமோதிய பெண்கள் கூட்டம்-கூட்டாஞ்சோறு கட்டிக்கொண்டு உறவினர்களுடன் குவிந்தனர்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் காணும் பொங்கலையொட்டி கோயில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என தொடர்ந்து 3 நாட்களுக்கு இந்த விழாவானது கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இதற்கென பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஒருசேர விடுமுறை விடப்படுவதன் காரணமாக வெளியூர்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் வசித்து வரும் சொந்த ஊர்களுக்கு சென்று அங்கு ஒன்றாக பொங்கலிட்டு கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி நடப்பாண்டில் இந்த பொங்கல் விழாவானது கடந்த 15ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினமான மாட்டுப் பொங்கலையொட்டி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தாங்கள் வளர்த்து வரும் ஆடு, மாடுகளுக்கு பொங்கலிட்டு சூரியபகவானை வழிபட்டனர்.

இந்நிலையில் நேற்று காணும் பொங்கலானது கொண்டாடப்பட்ட நிலையில் காலை 10 மணி அளவிலேயே பெண்கள் கூட்டாஞ்சோறு கட்டிக்கொண்டு தங்களது குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் கோவில்களுக்கு சென்று அங்கு ஒன்றாக ஆடிப்பாடி மற்றும் ஒன்றாக அமர்ந்து தங்கள் எடுத்துச்சென்ற உணவினை பரிமாறி சாப்பிட்டு மகிழ்ந்தனர். அதன்படி இந்த விழாவானது திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்,மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில், நீடாமங்கலம் சந்தானராமசுவாமி கோயில், ஆலங்குடி குரு கோயில் மற்றும் எண்கண் சுப்பிரமணியசுவாமி கோயில் உட்பட பிரசித்தி பெற்ற பல்வேறு கோவில்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

இதுமட்டுமன்றி கிராம அளவில் இருந்து வரும் கோவில்களிலும் பெண்கள் ஒன்று சேர்ந்து சில்கோடு, ஸ்கிப்பிங் கயிறு மற்றும் ஓட்டபந்தயம், கபடி உட்பட பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். மேலும் பல்வேறு கிராமங்களில் சிறுவர், சிறுமியர்களுக்கான ஓட்டப்பந்தயம் சைக்கிள் போட்டிகள் நீச்சல் போட்டிகள் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. மேலும் இந்த காணும் பொங்கலையொட்டி மாவட்டம் முழுவதும் எஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தியாகராஜசுவாமி கோயில் பூட்டப்பட்டதால் ஏமாற்றம்: திருவாரூரில் 5 வேலி (33.5 ஏக்கர்) பரப்பளவை கொண்ட வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வரும் நிலையில் காணும் பொங்கல் நாளில் பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 50 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் ஒன்று கூடி இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2021ம் ஆண்டு மற்றும் கடந்தாண்டு என 2 ஆண்டுகள் கோயில் வழிபாடுகளுக்கு தடை காரணமாக இந்த காணும் பொங்கல் விழா களை இழந்தது.

இந்நிலையில் நடப்பாண்டில் இதுபோன்று இல்லாமல் வழிபாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தியாகராஜசுவாமி கோயிலுக்கு செல்வதற்காக திருவாரூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கூட்டாஞ்சோறு கட்டி கொண்டு வந்தனர்.

ஆனால் கோயிலின் விட்டவாசல் அருகே 70 வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் நேற்று முன்தினம் இரவு திடீரென இறந்ததையடுத்து மேற்படி தியாகராஜசுவாமி கோயிலின் வழிபாடுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டதன் காரணமாக பொது மக்கள் ஏமாற்றமடைந்து திரும்பி சென்றனர். இருப்பினும் அந்த பெண்மணி இறுதிசடங்கு முடிவுற்ற பின்னர் மாலை 5 மணிக்கு மேல் கோயிலின் நடைகள் திறக்கப்பட்ட நிலையில் உள்ளூர் பக்தர்கள் போன்ற நூற்றுகணக்கான எண்ணிக்கையில் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வழிப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: