விழுப்புரம் மாவட்டத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம்-பொழுது போக்கு இடங்களில் மக்கள் குவிந்தனர்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் காணும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். பொழுதுபோக்கு இடங்களிலும் அதிகளவில் குவிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை ஒரு வாரம் கொண்டாடப்படும். அதன்படி கடந்த 14ம் தேதி போகியுடன் துவங்கிய பொங்கல் பண்டிகை தொடர்ந்து பெரும் பொங்கல், மாட்டுப்பொங்கலை தொடர்ந்து நேற்று காணும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. குடும்ப உறவினர்கள் ஒன்றாக சந்தித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் இந்த காணும் பொங்கலையொட்டி குடும்பத்துடன் பொழுதுபோக்கு இடங்களில் குவிந்து அங்கு தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் தடுப்பணை, தென்பெண்ணை ஆறு, நீர் நிலைகளில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் வீடுர் அணை, பனமலைபேட்டை உள்ளிட்ட  பொழுதுபோக்கு இடங்களிலும் குடும்பத்துடன் குவிந்த பொதுமக்கள் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். மேலும் தங்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து அங்கேயே பரிமாறி சாப்பிட்டனர்.

காணும் பொங்கலையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.பி. நாதா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே காணும் பொங்கலையொட்டி பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்படி கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மகளிர், சிறுவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

செஞ்சி: விழுப்புரம் மாவட்டத்திலேயே வரலாற்று சிறப்புமிக்க இடமாக செஞ்சிக்கோட்டை விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று காணும் பொங்கலையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிந்தனர். ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று சுற்றுலா பயணிகள் செஞ்சி ராஜகிரி, கிருஷ்ணகிரி ஆகிய கோட்டைகளுக்கு வருவது வழக்கம்.

இதேபோன்று நேற்று காணும் பொங்கல் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் செஞ்சி கோட்டைக்கு வருகை புரிந்தனர். இவர்கள் செஞ்சிக்கோட்டையில் உள்ள குதிரைலாயம், பீரங்கிகள், களஞ்சியங்கள், கல்யாண மஹால், ஆஞ்சநேயர் கோயில், கமலக்கண்ணி அம்மன் கோயில், வெங்கட்ரமணர் கோயில், யானை குளம், செட்டி குளம் உள்ளிட்ட பழமை வாய்ந்த இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

திண்டிவனம்: மயிலம் வள்ளி, தெய்வானை சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயிலில் காணும் பொங்கலை யொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திண்டிவனம் அடுத்த தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோயில், விட்டலாபுரம் சக்திவேல் மலை மேல் உள்ள முருகன் கோயில், திண்டிவனம் அடுத்த அனந்தமங்கலம் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் மலைக்கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் குடும்பத்துடன் குவிந்த பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் திண்டிவனம் பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: