பொங்கல் தினத்தை முன்னிட்டு ஒரேநாளில் தீவுத்திடல் பொருட்காட்சிக்கு 47 ஆயிரம் பேர் வருகை

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தீவுத்திடலில் நடைபெற்று வரும் பொருட்காட்சியை நேற்று முன்தினம் ஒரேநாளில் 47 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் 47வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியின் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் 4ம் தேதி தொடங்கியது. தீவுத்திடலில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஓட்டல்கள் தமிழ்நாடு உணவகம், 10,000 சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி திரையரங்கம், 27 அரசுத் துறைகள் மற்றும் 21 பொதுத்துறைகள் என 48 துறைகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பனிக்கட்டி உலகம், சிறுவர் ரயில், மீன் காட்சியகம், 3டி திரையரங்கம், நவீன கேளிக்கை சாதனங்கள், பேய் வீடு, டெக்னோ ஜம்ப், துபாயின் புர்ஜ் கலிபா, மலேசியா டுவின் டவர் உள்ளிட்ட 32 க்கும் மேற்பட்ட பல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.40, சிறுவர்களுக்கு ரூ.25 வசூலிக்கப்படுகிறது. காலை 10 மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் இதே நேரம் வரை எனவும் மற்ற நாட்களை பொருத்தவரையிலும் மாலை 3 மணியிலிருந்து இரவு 10 வரை என பொருட்காட்சி மார்ச் மாதம் 8ம் தேதி வரை 70 நாட்கள் நடைபெற உள்ளது.  இதனிடையே பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் குடும்பங்களுடன் பொருட்காட்சிக்கு வந்து படையெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையில் ஒரேநாளில் 38,323 பெரியவர்கள், 9,062 குழந்தைகள் என மொத்தம் 47,385 பேர் பொருட்காட்சிக்கு வந்துள்ளனர்.

Related Stories: