ஆறுகளில் உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

வாரணாசி: வாரணாசியில் இருந்து ஆறுகளின் வழியாக சுமார் 3200 கி.மீ தூரம் செல்லும் உலகின் நீண்ட தூர சொகுசு கப்பல் பயணத்தை பிரதமர் மோடி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் இருந்து அசாமின் திப்ருகர் வரை உலகின் நீண்ட தூர ஆற்று வழி சொகுசு கப்பல் பயணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக எம்.வி கங்கா விலாஸ் என்ற கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வாரணாசியில் இருந்து புறப்பட்டு கங்கை, பிரம்மபுத்திரா உள்ளிட்ட 27 ஆறுகளின் வழியாக 51 நாட்களில் 3200 கி.மீ. தூரம் சென்று திப்ரூகர் நகரை அடையும்.

வாரணாசியில் இருந்து ‘எம்வி கங்கா விலாஸ்’ சொகுசு கப்பலின் முதல் பயணத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் ரூ.1000 கோடி மதிப்பிலான உள்நாட்டு நீர்வழித்திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைத்தார். இதனை தொடர்ந்து விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்,‘‘கங்கை ஆற்றில் சொகுசு கப்பல் சேவையை தொடங்குவது மிகவும் முக்கியமான தருணமாகும். இது இந்திய சுற்றுலாவின் புதிய யுகத்தை அறிவிக்கின்றது.

இந்த கப்பல் சேவை சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, புதிய வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கும். வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்கு வலுவான இணைப்பு அவசியமாகும். இந்தியாவின் நதிகள் நாட்டின் நீர் சக்தி, வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறைக்கு புதிய உச்சங்களை தரும். 2014ம் ஆண்டுக்கு பிறகு நவீன இந்தியாவின் காரணமாக பண்டைய வலிமையை பயன்படுத்த தொடங்கி உள்ளோம்.  2014ம் ஆண்டில் 5 தேசிய நீர்வழி பாதைகள் மட்டுமே இருந்தது. தற்போது இது111 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளிலும் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

Related Stories: