மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் மருத்துவர் நாகராஜன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நியமிக்கப்பட்ட மருத்துவர் நாகராஜன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத் தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக்குழு தலைவர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வந்த நாகராஜன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார். அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் மருத்துவ துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: