ஆளுநரை கண்டித்து சென்னையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ஆளுநர், தமிழ்நாட்டை தமிழகம் என்றே அழைக்கலாம் என பேசியிருந்தார். மேலும், சட்டப் பேரவையில் தனது உரையில் திராவிட மாடல் ஆட்சி உள்ளிட்ட வார்த்தைகளையும் தவிர்த்திருந்தார். தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என் ரவி கருத்து தெரிவித்ததை எதிர்த்து பல்வேறு அமைப்பினர், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆளுநரை கண்டித்து 13 ஆம் தேதி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை சின்னமலையில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக வி.சி.க. கண்டனம் தெரிவித்தனர். ஆளுநர் உரையில் அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் பெயரை சொல்ல மறுத்ததை கண்டித்தும் ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெறக் கோரி திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் முழக்கம் எழுப்பி வருகின்றனர். பேரவை கூட்டம் முடியும் முன்னரே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: