சென்னை: ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வர்த்தக மையமாக ஓசூர் வர்த்தக மையம் அமையும் என உறுதி அளித்தார்.
புதிய தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட ஆய்வில் புதிய தொழிற்சாலைகளில் 80 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு பெறுவது தொடர்பாக அரசு ஆராயும். ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் தொழில் முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. ஆம்வே தொழிற்சாலை மூடப்படும் சூழல் உள்ளது, விசாரித்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.