புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு பதில்

சென்னை: புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வுகள் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். முன்னாள் ஒன்றிய அமைச்ர் சரத்யாதவ் மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சட்டப்பேரவை உறுப்பினர் முத்துராஜ் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையில் 3 லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசித்து வருகின்றனர். புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த பிறகு புதுக்கோட்டை மாநகராட்சியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுக்கோட்டையை சுற்றுவட்டாரத்தில் உள்ள சில ஊராட்சிகளை இணைத்தால் மாநகராட்சியாக தரம் உயர்த்த வாய்ப்புள்ளது. புதுக்கோட்டைக்கு ரூ.642 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கோவையில் உள்ள அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும் எனவும் அமைச்சர் கே.என்.நேரு பேரவையில் கூறினார்.

Related Stories: