அதிமுக ஆட்சியில் செவிலியர்கள் நியமனத்தில் விதி மீறல் 3 பேர் கொண்ட குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்கள் நியமனத்தில் விதி மீறல் நடந்துள்ளது என்றும், 3 பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு செய்து துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழக சட்டப் பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கொரோனா காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும். ஆயிரக்கணக்கில் நோயாளிகள் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் சேர்ந்தபோது, சிகிச்சை உதவிக்கு அழைக்கப்பட்ட 8,500 செவிலியர்களில் பலரும் முன்வராத நிலையில் 2,472 செவிலியர்கள்தான் முன்வந்து தற்காலிக பணியில் சேர்ந்தனர். தினமும் 8 மணிநேரம் கவச உடையில் இருந்து பணியாற்றினர். அவர்களின் உணர்வை அறிந்து அவர்களுக்கு நிரந்தப் பணி வழங்க வேண்டும். தற்போது 3 ஆயிரம் காலிப் பணியிடங்கள் இருப்பதால் அவர்களை இந்த பணியிடங்களில் அமர்த்த வேண்டும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்: 2016ம் ஆண்டு சட்டம் இயற்றி, செவிலியர் பணியிடத்தில் எவ்வளவு காலிப் பணியிடம் உள்ளதோ அதை நிரப்பிவிட்டு, அதற்கு கூடுதலாக நிரப்பும் போது காலிப் பணியிடத்தில் 10 சதவீதத்திற்கு மிகையில்லாமல் நிரப்பலாம் என்று அதிமுக ஆட்சியில் உத்தரவிடப்பட்டது. ஆனால் 7,543 பேரை நியமிக்க வேண்டிய நிலையில், 8,232 பேரை பணியில் சேர்த்தனர். இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில், அந்த நியமனம் தவறு என்று தீர்ப்பு வந்தது. 2018-20ம் ஆண்டுகளில் நடந்த 15 ஆயிரம் செவிலியர்கள் நியமனத்தில் விதி மீறல் உள்ளது.

தற்காலிக நியமனத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவில்லை. அவர்களே என்னிடம் தற்காலிக பணியில் தான் சேர்ந்தோம் என்று தான் கூறியுள்ளனர். கொரோனா தொற்று இல்லை என்பதால் தற்போது அவர்களுக்கு பணியில்லாத நிலை ஏற்பட்டது. மாற்றுப் பணியும் அளிக்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் மருத்துவ வாரியம் மூலம் பணியில் சேரவில்லை என்றாலும் கூட, அவர்களுக்கு எதிர்காலத்தில் பணி நியமனங்களில் முன்னுரிமை வழங்கப்படும். அவர்களுக்கு ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரம் என்ற அளவில் ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.

அவர்களுக்கு வழங்கப்படும் பணி குறித்த விளம்பரம் 2 நாட்களில் வெளியிடப்படும். அதன்படி அவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படும். அது மட்டுமல்லாமல், இந்த நியமனத்தில் நடந்த விதி மீறல் குறித்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு, துணை போனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை வாரியம் மூலம் முந்தைய அரசு தேர்வு செய்திருக்கலாம். எடப்பாடி பழனிசாமி: அம்மா கிளினிக் பணி எப்படி செல்கிறது என்பதை கவனித்து விட்டு அவர்களை நிரந்தரம் செய்யலாம் என்றிருந்தோம். திடீரென்று கொரோனா தொற்று சூழ்நிலை எழுந்ததால் அந்த நிலை ஏற்பட்டது. தற்போதும் சீனாவில் தொற்று வந்துள்ளது. இதே சூழ்நிலை வந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அமைச்சர் மா.சுப்பிரமணியன்: உங்கள் ஆட்சியில் பணி நிரந்தரம் செய்யாமல், இப்போது மனிதநேயம் பற்றி பேசுவது வியப்பாக உள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: