தமிழ்நாட்டில் மத்திய சிறைகளில் காவலர்கள், கைதிகள் தேவையின்றி வெளியே செல்வதை தடுக்க பயோமெட்ரிக் லாக் சிஸ்டம்: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்

வேலூர்: தமிழக மத்திய சிறைகளில் காவலர்கள், கைதிகள் தேவையின்றி வெளியே செல்வதை தடுக்க பயோமெட்ரிக் லாக் அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், 12 பார்ஸ்டல் சிறைகள், 5 துணை சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளை சிறைகள், 2 திறந்தவெளி சிறைகள் உள்ளன. இவற்றில் தற்போது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை, தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறைக்குள் குறிப்பிட்ட பிளாக்கில் பணியாற்றும் காவலர், பணி இல்லாத பிளாக்கில் சென்று கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட கஞ்சா, செல்போன், வினியோகம் செய்வதாகவும், கைதிகள் வேறு பிளாக்கிற்கு சென்று மற்ற கைதிகளுடன் தகராறில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில், சிறையில் உள்ள பிளாக்கில் பயோ மெட்ரிக் லாக் சிஸ்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சிறைகளில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் கைதிகள் வேறு பிளாக்கிற்கு சென்று கைதிகளுடன் மோதல் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வினியோகம் செய்வதாக புகார்கள் வந்தது. சிறைகளில் பணியாற்றும் உதவி சிறை அலுவலர், கைதிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு செல்போன் வழங்கியது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெறும் விதி மீறல்களை தடுக்கும் வகையில் பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் அமைக்கும் பணி மத்திய சிறைகளில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் ஒவ்வொரு பிளாக்கிற்கும் பொருத்தப்படுகிறது. அந்த பிளாக்கில் பணியாற்றும் காவலர் கைரேகை பதிவேற்றம் செய்யப்படும். அந்த காவலர் பணிக்கு வரும்போது, கைரேகை பதிவு செய்யும்போதுதான், அந்த பிளாக்கில் கதவு திறக்கும். இந்த பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் மூலம் சிறை காவலர்கள் பணி ஒதுக்கீடு செய்யாத பிளாக்கிற்கு செல்ல முடியாது. அதேபோல் கைதிகளும் மற்ற பிளாக்கிற்கு செல்வதை தடுக்க முடியும். மேலும் சிறைக்குள் பிளாக்கிற்கு இடையே கைதிகளின் மோதலை தடுக்க வாய்ப்பு உள்ளது. இந்த பயோமெட்ரிக் லாக் சிஸ்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: