எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் கருப்பு சட்டையில் வந்த எடப்பாடி வெள்ளை சட்டையில் வந்த ஓபிஎஸ்

தமிழ்நாடு பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது அணியை சேர்ந்த அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். இதுபற்றி விசாரித்தபோது, தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். இவர்கள் இருவருக்கும் அருகருகே இருக்கைகள் போடப்பட்டுள்ளது. தற்போது , இருவரும் அதிமுகவில் தனி அணியாக செயல்படுவதால் இருவரும் பேரவையில் அருகருகே உட்கார்ந்து சட்டப்பேரவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலை உள்ளது.

இதையடுத்து எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்தார். அதுபோல் எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவுவை பலமுறை நேரில் சந்தித்தும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். நேற்று முன்தினமும், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து முறையிட்டனர். ஆனாலும், இன்னும் இருவரின் இருக்கைகள் மாற்றப்படவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தியே நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியை சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வந்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வழக்கம்போல் வெள்ளை சட்டை அணிந்து உற்சாகமாக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.

Related Stories: