வேங்கைவயல் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: வேங்கைவயல் கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்து கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 26ம் தேதி தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் வசித்து வந்த பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது பேசிய, விஜயபாஸ்கர் (அதிமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), சின்னதுரை (மார்க்சிஸ்ட்), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ஜவஹிருல்லா (மமக), வேல்முருகன்( தவாக) ஆகியோர் பேசும்போது, வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர்  குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித  கழிவுகளை போட்டு அசுத்தம் செய்தவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல் எனக்கு கிடைத்தவுடனே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்திடவும், பாதுகாப்பான குடிநீர் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்திடவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தினேன். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அலுவலர்கள் அக்குடியிருப்பு பகுதிக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தனர். அவர்கள் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் வாயிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள 32 வீடுகளுக்கும் ரூ.2 லட்சம் செலவில் முற்றிலும் புதிய இணைப்பு குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, 5-1-2023 முதல் சீரான குடிநீர் விநியோகம் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.7 லட்சம் செலவில் அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கு தற்போது தினசரி டேங்கர் லாரி மூலம் சுகாதார ஆய்வாளர் மேற்பார்வையில் காலையும், மாலையும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.   இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 70 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சாதி, மதங்களை தூக்கிப் பிடித்து, பிரிவினையை ஏற்படுத்தி வரும் சில சமூக விரோதிகள் இன்னும் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இவர்களையெல்லாம் தாண்டி சாதி, இன, மத வேறுபாடுகள் அனைத்தையும் களைந்து, நாம் அனைவரும் சமஉரிமை கொண்ட மனிதர்கள் என்ற உணர்வோடும், மனிதநேயத்தோடும் விளங்கிடவேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை இரும்புக்கரம் கொண்டு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். சாதி, மதங்களை தூக்கிப் பிடித்து, பிரிவினையை ஏற்படுத்தி வரும் சில சமூக விரோதிகள் இன்னும் இந்த நாட்டிலே இருக்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

Related Stories: