சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் என அறிவிப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து திருமாவளவன் பேசினார். தொடர்ந்து திருமாவளவன் வருகிற 13ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேற்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி சந்தித்து பேசினார். அப்போது எம்எல்ஏக்கள் சிந்தனை செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ், பனையூர் பாபு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். சந்திப்புக்கு பின்னர் திருமாவளவன் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆங்கில புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தோம்.

சட்டப்பேரவையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை முற்றிலும் அறிந்தவர் ஆளுநர். முன் அனுபவம் உள்ளவர். ஆனால் இவ்வாறு செய்கிறார் என்றால் அது உள்நோக்கத்தோடு, திட்டமிட்டு, செய்த ஒன்று. எனவே, இதை அனுமதிக்க முடியாது. இதை உணர்ந்த முதல்வர் அந்த இடத்திலேயே விரைவான முடிவு எடுத்து சிறந்த ஆளுமை என்பதை இந்த நடவடிக்கையின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் முடிவுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பது என்பதையும் வெளிப்படுத்தும் வகையில் வருகிற 13ம் தேதி மாலை 3 மணியளவில் சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம். ஆளுநரை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றுகிற வரை தொடர்ந்து விசிக போராட்டங்களை முன்னெடுக்கும். இவ்வாறு விசிக தலைவர்  திருமாவளவன் கூறினார்.

Related Stories: