திருவாரூர் மாவட்டத்தில் 3.91 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு-கலெக்டர், எம்பி துவக்கி வைத்தனர்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 91 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் எம்.பி செல்வராஜ் துவக்கி வைத்தனர்.தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற திமுக தலைமையிலான அரசில் முதல்வர் மு .க ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலேயே முதல் கையெழுத்தில் ஒன்றாக கொரோனா நிவாரணத் தொகையாக ரூ 4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பில் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து இந்த ரூ 4 ஆயிரம் தொகையானது இரு தவணைகளாக மாநிலம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. இதுமட்டுமின்றி 14 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையையொட்டி 20 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது. நடப்பாண்டில் அரிசி மற்றும் சர்க்கரை தலா ஒரு கிலோ மற்றும் செங்கரும்பு இவைகளுடன் ரூ.ஆயிரம் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்குவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான டோக்கன் வழங்கும் பணி கடந்த 3ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் வரையில் நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 136 குடும்ப அட்டை தாரர்களுக்கு இந்த டோக்கன் நியாயவிலை கடை ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை நேற்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில், மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை துவக்கி வைத்தனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இந்த பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவக்க விழாவானது நேற்று திருவாரூர் தெற்கு வீதியில் இயங்கி வரும் நியாய விலை கடை ஒன்றில் நடைபெற்ற நிலையில் இதனை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் நாகை எம்.பி செல்வராஜ் துவக்கி வைத்தனர்.

இதில் டிஆர்ஓ சிதம்பரம், கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் கலியபெருமாள், ஆர்டிஓ சங்கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, திருவாரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் புலிவலம் தேவா, நகராட்சி தலைவர் புவனப்பிரியா செந்தில், துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் கலியபெருமாள், நகராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ் மற்றும் செந்தில், தாசில்தார் நக்கீரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பொங்கல் தொகுப்பு குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில், இந்த பொங்கல் தொகுப்பினை இன்று (நேற்று 9ம் தேதி) முதல் 12ம் தேதி வரையில் தங்களது பகுதி நியாயவிலை கடைகளில் பொது மக்கள் பெற்றுகொள்ளலாம், இந்த தேதிகளில் பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் 13ம் தேதியன்று பெற்றுகொள்ளலாம் என்பதுடன் இதுதொடர்பாக புகார்களுக்கு திருவாரூர் சரக துணை பதிவாளர் கைபேசி எண் 7824039202 மற்றும் மன்னார்குடி சரக துணை பதிவாளர் கைபேசி எண் 7338749203 மற்றும் இணை பதிவாளர் கைபேசி எண் 7338749200 ஆகிய எண்களில் பொது மக்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: