சூரிய சக்தியில் இயங்கும் வண்ண விளக்குகளுடன் மெரினா மணல்பரப்பில் காவல் உதவி மையம்: மாநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை: சூரிய சக்தியில் இயங்கும் வகையில் மெரினா கடல் மணல் பரப்பில் காவல் உதவி மையம் மாநகர காவல்துறையால் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையை காண ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் வருகின்றனர். கூட்ட நெரிசலில் குடும்பங்களுடன் வரும் குழந்தைகள் சிலர் மற்றும் முதியவர்கள் மாயமாவது வாடிக்கையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவும், இரவு நேரங்களில் காவல் உதவி மையத்தை எளிதில் அடையாளம் காணும் வகையிலும் மாநகர காவல்துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் சூரிய மின் சக்தியில் இயங்கும் ‘காவல் உதவி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி மையம் மெரினா கடற்கரையில் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ளது. மாநகர காவல்துறையுடன் கடலோர பாதுகாப்பு குழுவின் காவலர்களும் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணித்து மெரினா கடற்கரையில் ஒளிரும் விளக்குகளுடன் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்த உதவி மையத்தின் மூலம் கடலில் குளிக்கும் இளைஞர்களை பாதுகாப்பதோடு, மனச்சோர்வடைந்து மனநிலையில் தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை காப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றனர். கடற்கரை மணல் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த காவல் உதவி மையத்தை பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் மின் விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது, இரவு நேரத்தில் மெரினா கடற்கரைக்கு கொள்ளையர்கள் பற்றிய அச்சமின்றி பொதுமக்கள் சென்று வர ஏதுவாக அமைந்துள்ளது.

Related Stories: