ஆந்திராவில் இருந்து சென்னைக்கு காரில் கஞ்சா கடத்திய மும்பை வாலிபர் கைது: கார், கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்திய மும்பை வாலிபர் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி அருகே எளாவூரில் உள்ள சோதனைச் சாவடியில் போலீசார் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த சொகுசு கார் நிற்காமல் சென்று விட்டது என்றும், அதில் பார்சல்களில் ஏதோ கடத்தி செல்லப்படுகிறது எனவும், குறிப்பிட்ட அந்த காரை மடக்கி பிடிக்க வேண்டும், என அங்கிருந்த போலீசார் ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் உள்ள மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவிகா மற்றும் எஸ்ஐக்கள் ஆறுமுகம், அன்பு ஆகியோர் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை நான்கு முனை சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, குறிப்பிட்ட அந்த காரை மடக்கினர். அதில் இருந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தால், அவர்களது காரை சோதனை செய்தனர்.

அதில், 2 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா இருந்தது தெரிய வந்தது. மேலும் கஞ்சா கடத்தியதற்கு பயன்படுத்திய கார் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள், சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த கோபி (22), அவரது கூட்டாளி மும்பை பகுதியை சேர்ந்த சூர்யா (எ) சுரேஷ் (35) என்பதும் தெரிந்தது. இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது. அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: