2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி எம்.பி. தமிழ்நாட்டில் போட்டி?.. காங்கிரஸ் திட்டம்..!

டெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை பொதுத் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியாக ஆய்வு செய்து, அதன் வெற்றி தோல்விகளை அரசியல் கட்சி தலைவர்கள் அலசி வருகின்றனர். அத்தோடு கட்சியின் மூத்த தலைவர்கள் எங்கு போட்டியிட வேண்டும் என்பது பற்றிய பட்டியலையும் அவர்கள் தயாரித்து வருகின்றனர்.

கடந்த, 2014, 2019 மக்களவை தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் பாஜக  ஆட்சி அமைத்தது. இதனால், எப்படியாவது, 2024-ல் பாஜக ஆட்சி அமையாமல் தடுத்துவிட வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயண யாத்திரை, பல மாநிலங்களை கடந்து 108 நாட்களில் 49 மாவட்டங்கள் வழியாக 3 ஆயிரத்து 122 கி.மீ. தூரம் கடந்துள்ளது. ராகுலின் யாத்திரை, தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

இதனிடையே மக்களவை தேர்தலுக்கான திட்டம் குறித்து, யாத்திரை பொறுப்பாளர், தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் உள்ளிட்டோருடன், ராகுல் காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த, 2014, 2019 தேர்தல்களின் போதே, கன்னியாகுமரியில் ராகுல் போட்டியிட வேண்டும் என, தமிழக காங்., நிர்வாகிகள் வலியுறுத்தினர். தமிழ்நாட்டில் போட்டியிட ராகுல் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: