நகராட்சி நிர்வாக துறை சார்பில் நடைபெறும் திட்ட பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: நகராட்சி நிர்வாக துறை சார்பில் நடைபெறும் அனைத்து திட்ட பணிகளையும் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் நடைபெறும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் அரசாணைகள் வெளியிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், அரசாணை வெளியிடுவதற்கு தேவையான நிதி ஆதாரங்களை பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ‘விரிவான திட்ட அறிக்கைகளை தயார் செய்து நிர்ணயிக்கப்பட்ட கால அளவில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கடந்த 20 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளின் தற்போதைய நிலை, நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் அனைத்து திட்ட பணிகளையும் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சாய்குமார், தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ஸ்வர்ணா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: