தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மீதான புகாருக்கு என்ன நடவடிக்கை? விமானநிலையத்தில் கனிமொழி பேட்டி

மீனம்பாக்கம்: திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை சென்னை விமானநிலையத்தில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி வந்திறங்கினார். பின்னர் விமானநிலையத்தில் நிருபர்களுக்கு கனிமொழி எம்பி பேட்டியளித்தார். அவர் கூறுகையில், திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர்மீது சீண்டல்கள் நடந்ததாக கூறப்படும் புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

எனவே, திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும், அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பது உறுதி. அந்த சம்பவம் நடந்தபோது நான் கூட்டத்தில் இல்லை. கூட்டம் முடிந்த பிறகே இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. பொதுவாக கட்சி கூட்டங்களில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதையெல்லாம் யாராலும் முழுமையாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், நடந்ததாக கூறப்படும் சம்பவம் நிச்சயமாக வெட்கப்படக்கூடியது, கண்டிக்கத்தக்கது. அதனால்தான் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார். ஆளுங்கட்சி உள்பட பிற கட்சிகளை பற்றி தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை குறை கூறிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் அவரைப் பற்றி, அவரது கட்சியில் இருந்த ஒரு அம்மையார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்கு அண்ணாமலை என்ன பதில் கூறப்போகிறார்? அவர்மீது கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதற்கு, அவர்கள் முதலில் பதில் கூறட்டும் என கனிமொழி எம்பி காரசாரமாக கேள்வி எழுப்பினார். அவருக்கு திமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி காரில் கிளம்பி சென்றுவிட்டார்.

Related Stories: