ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் அணையின் நீர்மட்டம் தற்போது 62 அடியாக சரிந்துள்ளது. மேலும், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனப் பகுதி விவசாயிகள், தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து இருந்து வினாடிக்கு 2,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக கிருதுமால் நதி வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர்நது கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து வைகை அணையில் இருந்து கிருதுமால் நதி வழியாக தண்ணீர் திறந்து விடும்படி பொதுப்பணித்துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. 690 மில்லியன் கனஅடி, தண்ணீரை 10 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டதை தொடர்ந்து, வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,500 கனஅடியில் இருந்து 3,300 கனஅடியாக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மக்கள், வைகை ஆற்றில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: