செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு லண்டன், கியூவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவுடன் இணைந்து, ரூ.300 கோடி செலவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாவரவியல்  பூங்காவினை அமைக்க உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம் கடம்பூர் கிராமத்தில் 137.65.0 ஹெக்டேர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு கடந்த 28ம் தேதி (புதன்) அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், இத்திட்டம் 5 ஆண்டுகளில் (2022-2027) செயல்படுத்தப்படும் என்று அரசாணையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம், ஆயத்த கட்டம், செயல்படுத்தும் கட்டம் மற்றும் இறுதி கட்டம் ஆகியவற்றை கொண்டிருக்கும். இந்த திட்டமானது, பூர்வீக இனங்களின் தோட்டம், ஆர்போரேடம்ஸ் மற்றும் பேம்புசிடம்ஸ், மரக்கன்றுகள் மற்றும் ஹீலிங் கார்டன், மூலிகை தோட்டம், ரோஜா தோட்டம், ராக்கரி, ஜப்பானிய தோட்டம், பண்டைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பு போன்ற கூறுகளும் இத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரிய, அழிந்துவரும் தாவர இனங்கள் உட்பட தமிழ்நாட்டின் பூர்வீக தாவர வகைகளை பாதுகாத்து, தாவரவியல் பூங்கா பொழுதுபோக்கு மையமாகவும் மற்றும் சூழல்-சுற்றுலா மையமாகவும் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் முதல் கட்ட பணிகளில் விரிவானதிட்ட அறிக்கை தயாரிப்பதற்காக தமிழ்நாடு அரசு ரூ.1 கோடி விடுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories: