சென்னையில் பைக் ரேசால் இடையூறு செய்வதை தடுக்க 368 இடங்களில் வாகன சோதனை: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பைக் ரேஸ் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை தடுக்க சென்னை முழுவதும் 368 இடங்களில் வாகன சோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து  செய்யப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான புத்தாண்டின் போது, எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சென்னை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2023 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 16 ஆயிரம் போலீசார் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 1,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் இருப்பர். இதுதவிர சென்னை முழுவதும் 368 இடங்களில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும். 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

அதுமட்டுமின்றி கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் புறவழிச்சாலை, ஜிஎஸ்டி சாலை போன்ற இடங்களில் 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள், பைக் ரேஸ்களை தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள். சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல்துறையில் இந்த ஆண்டு ‘அதி நவீன டிரோன் கேமராக்கள்’ பயன்படுத்தப்பட உள்ளது. மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவலர்கள், குதிரைப்படைகள் மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து கடலில் இறங்குவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

புத்தாண்டில் மது குடித்து கொண்டாட்டங்களில் ஈடுபடலாம். அதேநேரம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். ‘உயிரிழப்பு இல்லாத புத்தாண்டு’ என மாநகர காவல்துறை முயற்சி செய்துள்ளது. மதுகுடித்து வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்ட நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு ‘விபத்தில்லா புத்தாண்டு’ கொண்டாடப்பட முயற்சி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களை பிடிக்க 28 ஏஎன்பிஆர் கேமராக்கள் அமைக்கப்படுகிறது. இதுதவிர 56 வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்டுகிறது. கடந்த 25ம் தேதி முதல் இதுவரை பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மொத்தம் 360 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சென்னை காவல்துறையில் க்யூ ஆர் கோடு பயன்படுத்தப்படும். மது குடித்துள்ளோர் இந்த க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்ட கால் டாக்சிகளில் செல்லலாம். இவ்வாறு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறினார்.

* 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை

நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை அனுமதிக்க கூடாது. இதை சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பர். போதைப்பொருட்கள் யாரேனும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் பாதுகாப்புக்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புகார்கள்படி உடனே நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: