திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி களைகட்டிய பகல்பத்து நிகழ்ச்சி: தேவதானம் கோயிலிலும் சிறப்பு ஏற்பாடு

சென்னை: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயிலில் இறைவன் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்னும் நான்கு நிலைகளில் நீர்வண்ண பெருமாள், நரசிம்மர், அரங்கநாதர் மற்றும் உலகளந்த பெருமாள் ஆகிய நான்கு நிலைகளில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இது 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றும் ஆகும். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி வருகிற 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முன்னதாக, பகல் பத்து உற்சவம் நிகழ்ச்சி கடந்த 23ம் தேதி முதல் இந்த கோயிலில் தொடங்கி, வெகு சிறப்பாக நடந்து வருகிறது. இதனால் காலை 8 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டதும், பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, பலவண்ண மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, சாமி உள்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. விழாவில், தினமும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து, ரங்கநாத பெருமாள் கோயில் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சொர்க்கவாசல் திறப்பு விழா (ஜன.2ம்தேதி) அன்று கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொது தரிசனம் மற்றும் 50 ரூபாய் சிறப்பு தரிசன கவுன்டர்கள் திறக்கப்பட உள்ளது’’ என்றனர்.

* தேவதானம்: திருவள்ளூர் மாவட்டத்தில் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் புகழ் விளங்கி வருகிறது. தேவதானம் என்ற கிராமத்தில் உள்ள இந்த கோயிலானது, வடஸ்ரீரங்கம் என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இந்த கோயிலில் ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி அளிக்கிறார். பதினெட்டரை அடி நீளமும், ஐந்தடி உயரமும் கொண்டு சயனத்தில் காட்சி அளிப்பதால் வேறு எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளதாக கருதப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருவது வழக்கம். இந்நிலையில், ஸ்ரீரங்கநாதர் கோயிலில் வரும் ஜன.2ம் தேதி வைகுண்ட ஏகாதசி மஹோத்ஸவம் நடக்கிறது. கோயிலில் பொதுமக்கள் வந்து வழிபட சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Related Stories: