ஆன்லைனில் கடன் தருவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம்ரூ. 3 லட்சம் பறித்த டெல்லியை சேர்ந்த மூன்று பேர் கைது: மீட்ட பணத்தை நேரில் ஒப்படைத்தார் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்

சென்னை: ஆன்லைனில் கடன் தருவதாக பார்வையற்ற மாற்றுத்திறனாளியை ஏமாற்றி ரூ.3 லட்சம் பறித்த டெல்லியை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சைதாப்பேட்டையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சரவணன் (38) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த அக்டோபர் 2020ல் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர்கள், ‘சவுத் இந்தியன் பைனான்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி வருடத்துக்கு ஒரு விழுக்காடு வட்டியில் கடன் தருவதாக கூறினர். அதை நம்பி, நான் பல்வேறு தருணங்களில் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 500ஐ அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு செலுத்தினேன். அதன்பிறகு அந்த நபர்களை தொடர்பு கொண்டபோது, அவர்களின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே, பார்வையற்ற என்னிடம் மோசடியாக பேசி பணத்தை பறித்த நபர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

புகாரின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மோசடி நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, மோசடி நபர்கள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. உடனே, தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்து ெசன்று பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் பணத்தை மோசடி செய்த டெல்லி உத்தம்நகரை சேர்ந்த சாந்தி (37), வசந்தி (44), டெல்லி பர்புல்பிகார் நஜபகட் பகுதியை சேர்ந்த முனீஷ் சர்மா (44) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதுபோல் பலரிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளியிடம் மோசடி செய்த ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், புகார் அளித்த மாற்றுத்திறனாளி சரவணனை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று தனது அலுவலகத்திற்கு நேரில் அழைத்து முழு பணத்தையும் ஒப்படைத்தார்.

Related Stories: