புதுக்கோட்டை இடையூரில் குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்ட விவகாரம்: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அறிக்கை அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்  இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. புதுக்கோட்டை இடையூரில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

மேலும் முறைகேட்டில் அந்த பகுதிகளில் இரட்டை குவளை முறை .(இரட்டை குவளை முறை: தேநீர் விடுதி போன்ற இடங்களில் உயர் வகுப்பினர் ஒரு டம்ளரிலும் மற்ற வகுப்பினர் வேறொரு டம்ளரிலும் அருந்தும் முறை) பழக்கத்தில் உள்ளதாகவும் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அப்போது இதனை மனுவாக தாக்கல் செய்தால் உடனடியாக விசாரிக்க தயாராக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இரட்டை குவளை முறை, தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது. மேல் நிலை நீர்த்தேக்க தொட்டில் கழிவுநீர் கலந்து என 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு துணை ஆணையர் ஆகியோர்  எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: