புதுக்கோட்டை தீண்டாமை சம்பவம் விவகாரம்: மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும்: ஐகோர்ட் கிளை

மதுரை: புதுக்கோட்டை அருகே கறம்பக்குடியில் நடந்த தீண்டாமை சம்பவம் தெடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடு செய்யப்பட்ட நிலையில், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

புதுக்கோட்டை கறம்பக்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு முறையீட்டை வைத்தார். புதுக்கோட்டை இடையூரில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டை குவளை முறை பழக்கத்தில் இருந்தது தெரியவந்தது.(இரட்டை குவளை முறை: தேநீர் விடுதி போன்ற இடங்களில் உயர் வகுப்பினர் ஒரு டம்ளரிலும் மற்ற வகுப்பினர் வேறொரு டம்ளரிலும் அருந்தும் முறை)புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரையில் பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமை நடந்து வருகிறது.

ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நிகழும் தீண்டாமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அந்த முறையீட்டில் கேட்கப்பட்டது. மேலும் இடையூரில் கழிவு நீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டார். அதற்கு முறையாக மனுவாக தாக்கல் செய்தால் உடனடியாக விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் கூறினார்.

Related Stories: