மணல் அள்ளுவதை கண்டித்து கொட்டும் மழையில் வாகனங்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்-விக்கிரவாண்டி அருகே பரபரப்பு

விக்கிரவாண்டி : விழுப்புரம் அடுத்த சோழகனூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை  பணிக்காக ஏரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளப்படுவதை கண்டித்து  நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கொட்டும் மழையில் பொக்லைன் இயந்திரம்,  லாரி ஆகியவற்றை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.விழுப்புரம் அடுத்துள்ள கானண ஒன்றியம்  சோழகனூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக ஏரியிலிருந்து மண்  அள்ளப்படுகிறது.

இதனை அப்பகுதியைச் சேர்ந்த  கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏரியில் அதிகளவு மண்  அள்ளப்படுவதால் மழைக்காலங்களில் குட்டையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கால்நடை மேய்ச்சலுக்காக செல்பவர்கள் தவறி விழுந்து இதுவரை 15க்கும்  மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 2010ம் ஆண்டு முதல்  இப்பகுதியில் ஏரி மண் அள்ளப்படுவதாகவும், மேலும் அரசு நிர்ணயித்த அளவைவிட  அளவுக்கு அதிகமாக மண் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படுவதாகவும்  அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டி பொக்லைன் இயந்திரம், லாரி  ஆகியவற்றை சிறைபிடித்து நேற்று 3வது நாளாக கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.தகவல் அறிந்ததும் காணை போலீசார்  மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடன்  நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். இதனையேற்று  கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து  கலைந்து சென்றனர்.

Related Stories: