சைபர் ஹேக்கத்தான் போட்டி இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற 3 குழுவுக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் ரூ.1 லட்சம் பரிசு

சென்னை: சென்னை காவல், சைபர் கிரைம் நடத்திய சைபர் ஹேக்கத்தான் போட்டியின் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற 3 குழுவினருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை காவல் துறையின், மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் பிரிவினரால் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகள் கொண்டு விவரங்கள் சேகரிப்பது, அடையாளங்கள் காண்பது உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக 8 தலைப்புகளில்  “சைபர் ஹேக்கத்தான்” என்கிற போட்டி கடந்த 6ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது.

மேற்கூறிய தலைப்புகளின் அடிப்படையில் மென்பொருள் மற்றும் கம்ப்யூட்டர் ப்ரோகிராம்களை உருவாக்கி கொடுக்கப்பட்ட விபரங்களுக்கு தீர்வு காணும் வகையில்  அமைக்கப்பட்ட இந்த போட்டியில்  302 குழுவினர் பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து கலந்து கொண்டனர். 300க்கும் மேற்பட்ட இத்தகைய திட்ட வரைவுகளை ஆராய்ந்ததில் 36 குழுவினர் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இதில், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் சைபர் தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் இவர்களில் சிறந்த 3 குழுவினரை தேர்ந்தெடுத்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று கிண்டி, அண்ணா பல்கலைக்கழகம், விவேகானந்தா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு “சைபர் ஹேக்கத்தான்”போட்டியில்  முதல் இடம் பெற்ற வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல்  கல்லூரி, வள்ளி தேவி தலைமையிலான  குழுவுக்கு ரூ.50 ஆயிரம், 2வது இடம் பெற்ற கோயம்புத்தூர், கேபிஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரி,  சதீஷ் தலைமையிலான  குழுவுக்கு ரூ.30 ஆயிரம்,

 3வது இடம் பெற்ற பெற்ற சென்னை, சத்திய பாமா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பொறியியல் கல்லூரி சரண்சுந்தர் குழுவுக்கு 20 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ், பதிவாளர் ரவிக்குமார், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் துணை ஆணையர் கிரண்ஸ்ருதி, மத்திய குற்றப்பிரிவு, துணை ஆணையர்-1 நாகஜோதி, காவல் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.  

Related Stories: