ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் போலீசாரை தாக்க முயன்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு: குண்டு காயத்துடன் குற்றவாளி கைது

ஓசூர்: ஓசூர் அருகே, கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் ஜிகினி பகுதியில், வீட்டில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசாரை தாக்க முயன்றதால், அவர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் குண்டு காயத்துடன் பிடிபட்டார்.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள தமிழக-கர்நாடக மாநில எல்லையான ஆனேக்கல் ஜிகினி பகுதியில், கல்லுபாளு கிராமம் உள்ளது. இங்கு பிரபல குற்றவாளி வருண் (எ) கெஞ்சன் மற்றும் அவனது கூட்டாளிகள் வீடு ஒன்றில் தங்கி, கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தனர்.

அவர்கள் மீது ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், அவர்களை கர்நாடக மாநிலம், ஆனேக்கல் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கல்லுபாளு கிராமத்தில் பதுங்கி இருந்த வருண் தனது கூட்டாளிகளை  போலீசார் சுற்றி வளைத்தனர். பின்னர், வருண் மற்றும் கூட்டாளிகள் தாமாக முன் வந்து சரணடையுமாறு, ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து போலீசார், 2 ரவுண்டு துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டனர். இதனால் ஆத்திரமடைந்த வருண் மற்றும் கும்பல், திடீரென வெளியேறி போலீசாரை சரமாரியாக தாக்க முயன்றனர். அப்போது, போலீசாரில் ஒருவர் சுட்டதில், வருண் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். இதை கண்ட மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதையடுத்து வருணை கைது செய்த போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். மேலும், தப்பியோடிய அவனது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: