உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியா இருந்தும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு சரியா? ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் விளக்கம்

ஐதராபாத்: இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய மேலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று  இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் கூறினார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான சி.ரங்கராஜன் பேசுகையில், ‘மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியா இப்போது உலகின்  ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. தனிநபர் வருமானத்துடன் ஒப்பிடும்போது சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி 197 நாடுகளில்  இந்தியா 142வது இடத்தில் உள்ளது.

நாட்டின் நிதிக் கொள்கையை  வகுப்பாளர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதில்  கவனம் செலுத்த வேண்டும். 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நல்ல முயற்சி தான். இருப்பினும்,  இந்த இலக்கை அடைய, ஆண்டுக்கு 9 சதவீத அளவில் வளர வேண்டும். அதற்காக குறைந்தது ஐந்து  ஆண்டுகள் ஆகும். அப்போது இந்தியாவின் தனிநபர் வருமானம் 3,472 டாலராக  (சுமார் ரூ.2.80 லட்சம்) இருக்கும்; இந்தியாவும் அப்போது நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும்.

ஆனால் அதற்காக நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்; ஓட வேண்டும். கொரோனா மற்றும்  ரஷ்யா-உக்ரைன் போரின் விளைவுகளை அடுத்து, எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு தெளிவான பாதையை அமைக்க வேண்டும். வளர்ச்சி விகிதத்தை 7  சதவீதமாக உயர்த்த வேண்டும். பின்னர் அதை 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை  உயர்த்த வேண்டும். தொடர்ச்சியாக ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்கு அதிக  வளர்ச்சியை காட்டினால், இந்திய பொருளாதாரம் அதன் இலக்கை அடையும்’ என்றார்.

Related Stories: