தச்சநல்லூர் அருகே நெல்லை கால்வாயில் தேங்கிய குப்பைகளால் சுகாதாரக்கேடு-அப்புறப்படுத்த கோரிக்கை

நெல்லை : அழகநேரி ரயில்வேகேட்டை ஒட்டியுள்ள நெல்லை கால்வாயில் குவிந்திருக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தேங்கியுள்ள குப்பைகளை விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.சுத்தமல்லி தடுப்பணையில் துவங்கும் நெல்லை கால்வாய் மூலம் நயினார்குளம், சேந்திமங்களம்குளம், குறிச்சிகுளம், ராஜவல்லிபுரம்குளம், பாலாமடைகுளம், அழகநேரிகுளம், கல்குறிச்சிகுளம் மற்றும் குப்பக்குறிச்சிகுளம் உள்பட மொத்தம் 24 குளங்கள் பாசன வசதி பெறுகிறது. மொத்தம் 28 கிமீ நீளமுள்ள இக்கால்வாயின் நீரைப் பயன்படுத்தி வாய்க்கால் மூலம் 2,000 ஏக்கரும், குளங்கள் மூலம் 3,000 ஏக்கரும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. தற்போது நெல்லை மாவட்டத்தில் விவசாயிகள் பிசான சாகுபடி செய்துவரும் நிலையில், நெல்லை கால்வாய் மற்றும் குளங்கள் மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகளும் விவசாய பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் நெல்லை கால்வாயின் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருட்கள் குவிந்து கிடப்பதால் நீரோட்டம் சீராக செல்வது பாதிக்கப்படுகிறது. குறிப்பாக டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கிறது. தச்சநல்லூரில் அழகநேரி ரயில்வேகேட் அருகிலுள்ள கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டுக்கழிவுகள் மற்றும் அமலை உள்ளிட்ட செடிகள் அங்குள்ள பாலத்தின் கீழ் அடைத்துக் கொண்டு அதிகளவில் தேங்கிக் கிடக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், அழகநேரி ரயில்வேகேட் அருகிலுள்ள கால்வாயில் படித்துறை உள்ளது. தாராபுரம், அழகநேரி, பிரான்குளம் பகுதி பொதுமக்கள் இங்கு துணி துவைக்கவும், குளிக்கவும் செய்கின்றனர். இங்குள்ள பாலத்தின் கீழே அமலைச் ெசடிகள், பிளாஸ்டிக் மற்றும் வீட்டுக் கழிவுப் பொருட்கள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதோடு, இறந்த நாயின் உடலும் மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் நிலவுகிறது.

கழிவுப் பொருட்கள் தேக்கத்தால் அழகநேரி குளம் உள்பட அதற்கு அடுத்துள்ள குளங்களுக்கும் தண்ணீர் சீரான வேகத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுப்பதோடு, அழகநேரி ரயில்வேகேட் அருகிலுள்ள கால்வாயில் தேங்கிக் கிடக்கும் கழிவுப் பொருட்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: