ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் டெல்லிக்குள் நுழைந்தது!: சோனியா காந்தி, பிரியங்கா பங்கேற்பு.. மக்கள் உற்சாக வரவேற்பு..!!

டெல்லி: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை முன்னெடுத்துள்ள ராகுல் காந்தியின் நடைப்பயணமானது டெல்லியை சென்றடைந்திருக்கின்றது. டெல்லி எல்லையில் ராகுலுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் என தொடர்ந்து நேற்றைய தினம் யாத்திரையானது ஹரியானா மாநிலத்தை எட்டியது.

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் ராகுல் காந்தியை வரவேற்று பிரம்மாண்ட யாத்திரையை நடத்தினர். நேற்றைய தினம் நடைபெற்ற யாத்திரையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மக்களவை உறுப்பினர் கனிமொழி கலந்துக்கொண்டு ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டார். 108ம் நாளாக இன்று காலை பாரத் ஜோடோ யாத்ரா, ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் தலைநகர் டெல்லிக்குள் பயணம் நுழைந்துள்ளது. இன்றைய இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சியினர் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக ராகுல்காந்தி 3,500 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.  ஒற்றுமை யாத்திரையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாப் வழியாக காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்ளப்படவிருக்கிறது. டெல்லியில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று பாரத் ஜோடோ யாத்ராவில் கமல்ஹாசன் கலந்து கொள்ளவுள்ளதாகவும், ஜனநாயகத்தை காக்க ராகுலின் நடைபயணத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சித் துணைத் தலைவர் மவுரியா ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தார்.

Related Stories: