செங்கல்பட்டில் முதன்முதலாக காவல்துறையின் மக்கள் குறை தீர் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் முதன்முறையாக நேற்று எஸ்பி அலுவலகத்தில் காவல்துறையினரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்பி பிரதீப் தலைமை தாங்கி, 32 பேரின் புகார் மனுக்களை பெற்று, அம்மனுமீது போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் வாரம்தோறும் புதன்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணிவரை மாவட்ட கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, தங்களின் குறைகள் மற்றும் புகார் மனு கொடுத்து பொதுமக்கள் பயனடைவதற்கு முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நேற்று செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் முதன்முதலாக பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் தலைமை தாங்கினார். இதில், இதுவரை காவல்துறை சார்பில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என 32 பேர், மாவட்ட எஸ்பி பிரதீப்பை நேரில் சந்தித்து, தங்களின் புகார் மனுக்களை வழங்கினர். இப்புகார்கள்மீது, சம்பந்தப்பட்ட பகுதி காவல் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.

பின்னர் அவர் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வருகிறோம். சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்து, திருந்தி வாழ்ந்து வருபவர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். காவல்துறை சார்பில், அவர்களின் மறுவாழ்வாதாரத்திற்கான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

Related Stories: