நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும்.! ஜெயக்குமார் பேட்டி

சென்னை: நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்ஸை தனிப்பட்ட முறையில் யாரும் நீக்கவில்லை, பொதுக்குழுதான் நீக்கியது. ஓபிஎஸ் மகன் மத்திய அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை எனவும் கூறினார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிவாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை கடுமையாம விமர்சித்தார். அதுமட்டுமின்றி தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குங்கள் என சவால் விடுத்தார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?.

வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும்.  ஓ.பன்னீர்செல்வம் நடத்தியது கட்சி கூட்டமே இல்லை. பண்ரூட்டி ராமச்சந்திரன் பண்பாக பேசக்கூடியவர். அவர் ஏன் ஒருமையில் பேசினார் என தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இயங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் அவரது தலைமையிலான கூட்டணிதான் அமையும். அவரது தலைமையை ஏற்றுத்தான் எல்லோரும் வருவார்கள். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் கட்சிக்கொடியை பயன்படுத்துவது தவறு. இவ்வாறு கூறினார்.

Related Stories: