மாமல்லபுரம் கடற்கரை, தீவுத்திடலில் 23ம் தேதி இந்திய நாட்டிய திருவிழா: அமைச்சர் தகவல்

சென்னை: இந்திய நாட்டிய திருவிழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் மற்றும் தீவுத்திடலில் வரும் 23ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார். சென்னை, திருவல்லிகேணி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், செயலாளர் சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய நாட்டிய திருவிழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் மற்றும் தீவுத்திடல் ஆகிய இடங்களில் வரும் 23ம் தேதி தொடங்கி ஜனவரி 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய நாட்டிய திருவிழாவையெட்டி தயாரிக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கான வரவேற்பு குறும்படத்தை வெளியிட்டார். பின்னர், சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் திறந்தவெளி உணவகத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுலாத்துறை இந்தியாவில் முதன்மை இடத்தை வகிக்கின்றது. இந்திய நாட்டிய திருவிழாவில் பரதநாட்டியம், மோகினியாட்டம், மணிப்பூரி, ஒடிசி, குச்சிப்புடி, கரகம், காவடி, தப்பாட்டம், ஒயிலாட்டம், பெங்காலின் கிராமிய கலையான புர்யுலா சாவ் நடனம், ராஜஸ்தான் மாநில கிராமிய கலை நிகழ்ச்சிகள் கிளாரினெட், சாக்ஸபோன், நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் இசையுடன் இணைந்து 63க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 11 கோடி உள்நாட்டு சுற்றுலா பயணிகளும், 2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இந்திய நாட்டிய திருவிழா நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களின் மூலம் கண்டுகளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: