ஆண்டிகுவா தீவில் தஞ்சமடைந்து உள்ள மெகுல் சோக்‌ஷி மேலும் ரூ.6,750 கோடி மோசடி: புதிதாக 3 வழக்குகளை பதிவு செய்தது சிபிஐ

புதுடெல்லி: ஆண்டிகுவா தீவில் தஞ்சமடைந்து உள்ள மெகுல் சோக்‌ஷி மேலும் ரூ.6,750 கோடி மோசடி செய்ததாக புதிதாக 3 வழக்குகளை சிபிஐ பதிவு செய்து உள்ளது. இந்தியாவில் முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்‌ஷி, போலி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,578 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்து உள்ளார். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நாட்டை விட்டு தப்பி ஓடிய மொகுல் சோக்‌ஷி, தற்போது டோமினிகா நாட்டில் உள்ள ஆண்டிகுவா தீவில் தஞ்சமடைந்து உள்ளார்.

அவர் சட்டவிரோதமாக தப்பி வந்ததாக அந்நாட்டில் தொடரப்பட்ட வழக்கும், முடித்து வைக்கப்பட்டது. இதனால், மெகுல் சோக்‌ஷியை நாடு கடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணை மேலாளர் கடந்த மார்ச் 21ம் தேதி அளித்து உள்ளார். அதில், ‘2010-2018ம் ஆண்டு இடைப்பட்ட காலக்கட்டத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பிற வங்கிகளின் கூட்டமைப்பு மூலம் பெற்ற கடன்களை முறையாக கண்டறியததால், மெகுல் சோக்‌ஷி இயக்குனர்களாக உள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட், நக்ஷத்ரா பிராண்ட்ஸ் லிமிடெட் மற்றும் கிலி இந்தியா லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு வழங்கிய கடனால் ரூ.6,746 கோடி கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது’ என கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரின்பேரில் மெகுல் சோக்‌ஷி மீது சிபிஐ புதிதாக 3 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மெகுல் சோக்‌ஷி மற்றும் அவரது நிறுவனத்தின் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரு முதலாளிகளின் ரூ.12 லட்சம் கோடி கடன் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பெரு முதலாளிகளின் பட்டியலில் விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி உள்ளிட்ட மோசடி மன்னர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பெற்ற பல் ஆயிரம் கோடி ரூபாய் வாரா கடன்களாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வசூலிக்க முடியாத கடன்களை தள்ளிவைக்கப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, ஒன்றிய அரசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகாருக்கு, 9 மாதங்களுக்கு பிறகு சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. 

Related Stories: